சுகமுனிவர் புஷ்பவனம் ஒன்று அமைத்து சுவாமியை வழிபட்டதால் 'புஷ்பவனம்' என்றும் 'பூவனூர்' என்றும் அழைக்கப்படுகிறது. திருநெல்வேலி பகுதியை ஆண்டு வந்த மன்னன் தவம் செய்து பார்வதி தேவியை மகளாகப் பெற்று இராஜராஜேஸ்வரி என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். சப்த மாதர்களுள் ஒருவரான சாமுண்டியை இறைவன் வளர்ப்புத் தாயாக அனுப்பி வைத்தான்.
சதுரங்க ஆட்டத்தில் வல்லவராக விளங்கிய தேவியை தோற்கடிப்பவருக்கே திருமணம் என்று அறிவித்தார் அரசன். ஒருசமயம் தல யாத்திரையாக இத்தலத்திற்கு வந்தபோது இறைவனே மாறுவேடத்தில் வந்து அம்பிகையைத் தோற்கடித்து திருமணம் செய்துக் கொண்டார். அதனால் இத்தலத்து மூலவர் 'சதுரங்கவல்லப நாதர்' என்ற பெயர் பெற்றார்.
மூலவர் 'சதுரங்கவல்லப நாதர்', 'புஷ்பவனேஸ்வரர்' என்னும் திருநாமங்களுடன், சதுர வடிவ ஆவுடையுடன் சிறிய லிங்க மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார். இத்தலத்தில் இரண்டு அம்மன் சன்னதிகள் உள்ளன. ஒரு சன்னதியில் 'கற்பகவல்லி' என்னும் திருநாமத்துடனும், மற்றொரு சன்னதியில் 'இராஜராஜேஸ்வரி' என்னும் திருநாமத்துடனும் காட்சி அளிக்கின்றனர்.
கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, பிட்சாடனர், சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் விநாயகர், லட்சுமி நாராயணர், காசி விஸ்வநாதர், அகத்தியர், வள்ளி தேவசேனை சமேத சுப்ரமண்யர், பசுபதீஸ்வரர், அய்யனார், சாஸ்தா, சமயக்குரவர்கள் நால்வர், கோதண்டராமர், மஹாலட்சுமி, பைரவர் ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.
வெளிப்பிரகாரத்தில் சாமுண்டேஸ்வரி அம்மன் சன்னதி உள்ளது. இவருக்கு சித்திரை மாத அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. லட்சுமி நாராயணருக்கும், அகத்தியருக்கும் ஒவ்வொரு பௌர்ணமியன்றும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
சுக முனிவர், அகத்தியர், பிரம்மா, இந்திரன் ஆகியோர் வழிபட்ட தலம்.
திருநாவுக்கரசர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|